சந்துமுனை சிந்து பாடிகள் யார்?
கேள்வி :- உள்ளாட்சி மன்றத் தேர்தல் களில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் அறிவிக்கப்படுகின்ற நிலையில் எந்தெந்த தொகுதிகள் பெண்களுக்கான தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் தனித் தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் பொதுத் தொகுதிகள் என்று ஏடுகளில் விளக்கமாக செய்திகள் வரவில்லையே?
கலைஞர் :- ஏடுகளில் அந்தச் செய்தி வராவிட்டாலும் இரண்டு நாட்களுக்கு முன்பாக அந்தந்த மாவட்ட அதிகாரிகளுக்கு அரசின் சார்பில் இந்த விவரம் தெரிவிக்கப் பட்டுள்ளது. """"தினமலர்"" நாளிதழில் மட்டும் அரசு அந்தப்பட்டியலை வெளியிட்டது என்று செய்தி வந்ததேதவிர, அதிலும் எந்தெந்த தொகுதிகள் என்ற விவரம் வரவில்லை. ஆனால் இந்த விவரங்கள் ஆளுங்கட்சிக்கு மட்டும் தரப்பட்டு, அந்தக் கட்சியின் சார்பில் அதற்கேற்ப வேட்பாளர்கள் பெயர்கள், தோழமைக் கட்சிகளுடன்கூட கலந்து பேசாமல் அறிவிக்கப்பட்டுவிட்டன. ஆனால் இந்த விவரங்கள் மக்களுக்குத் தெரியாத காரணத்தால், அந்தந்த தொகுதி களைச் சார்ந்த மக்கள் தங்கள் தொகுதி, பொதுத் தொகுதியா, பெண்கள் தொகுதியா, தனித் தொகுதியா என்று தெரியாத நிலையில் போட்டியிடுவதற்கே குழம்பி நிற்கக் கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட தொகுதி யாருக்கான தொகுதி என்று புரியாத நிலையில் அரசியல் கட்சிகளுக்கும் வேட்பாளர்களின் மனுக்களை வாங்குவதில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அந்தத் தொகுதி பொதுத் தொகுதியாக ஏற்கனவே இருந்தது என்ற நிலையில் அங்கே போட்டியிட விரும்புவோர் யார் யார் என்று கேட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டுவிட்டன. ஆனால் அரசு இரண்டு நாட்களுக்கு முன்பு அந்தத் தொகுதியை தனித்தொகுதி என்றோ, பெண்கள் தொகுதி என்றோ மாற்றியுள்ளது. அதனால் அந்தத் தொகுதியிலிருந்து புதிய வேட்பாளர்கள் மனுக்களைப்பெற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. பொதுவாக அரசாங்கம் உள்ளாட்சிமன்றத் தேர்தலில் மக்களையும், அரசியல் கட்சிகளையும் எப்படி ஏமாற்றிவிட்டு தேர்தலை நடத்த முற்பட்டு வந்துள்ளது. எவ்வாறு தோழமைக் கட்சிகளை கலந்து கொள்ளாமலேயே தன்னிச்சையாக வேட்பாளர்களை ஆளுங்கட்சி அறிவித்திருக் கிறதோ; அதைப்போலவே ஒட்டுமொத்தத் தேர்தலிலும் சூழ்ச்சி செய்து வெற்றி பெற்று விடலாம் என்று கருதுகிறது. அதன் அடையாளம்தான் எந்தெந்த தொகுதிகள் எந்தப் பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதிகள் என்பதை வெளிப்படையாக ஏடுகள் வாயிலாக அறிவிக்காமல் மூடி மறைத்து வைத்திருக்கின்ற செயலாகும். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகூட, தமிழக உள்ளாட்சி மன்றத் தேர்தலில், முஸ்லீம்கள் அதிகம் உள்ள வார்டுகளை பெண்கள் வார்டாக மாற்றியுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர். உதாரணமாக காயல் பட்டினம், கீழக்கரை, கடையநல்லுhர், தென் காசி, ஆம்பூர், பேர்ணாம்பட்டு, கூத்தாநல்லுhர், ராணிப்பேட்டை ஆகியவை என்று சொல்லி யிருக்கிறார்கள்.
கேள்வி :- சென்னையில் ஆங்காங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மணிக் கணக்கில் வாகனங்கள் எல்லாம் நிற்கின்ற புகைப்படங்கள் ஏடுகளில் வெளிவந்திருக் கின்றனவே?
கலைஞர் :- போக்குவரத்து நெரிசல் செய்தியோடு வேறொரு செய்தியும் வந்துள்ளது. முதல்வரிடமும், உயர் போலீஸ் அதிகாரி களிடமும் நல்ல பெயர் எடுக்க வேண்டுமென்பதற்காக; போக்குவரத்து போலீசார் ஆங்காங்கு வண்டிகளை நிறுத்தி வைத்து சோதனை என்ற பெயரில் குறைந்த பட்சம் அன்றாடம் ஒவ்வொருவரும் 50 வழக்குகளையாவது போட வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடுவதாகவும்; அதனால் தான் போக்குவரத்தைச் சரியாக பராமரிக்காமல் ஆங்காங்கு நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் மணிக் கணக்கிலே நிற்க வேண்டியிருப்ப தாகவும் சொல்லப்படுகிறது.
கேள்வி :- உள்ளாட்சி மன்றத் தேர்தல் களில் ஜெயலலிதாவின் கட்சி தோழமைக் கட்சிகளையெல்லாம் மதிக்காத போக்கில் நடந்து கொள்வதைப் பற்றி?
கலைஞர் :- அது, அவர்கள் கூட்டணி பற்றிய பிரச்சினை. அதில் நாம் தலையிட வேண்டியதில்லை. ஜெயலலிதா தோழமைக் கட்சிகளை மட்டுமல்ல; யாரையும் மதிக் கின்றவர் அல்ல என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். தோழமைக் கட்சி களுடன் பேச்சுவார்த்தை நடத்துவேன் என்று கூட அவர்கள் கட்சி சார்பில் கூறவில்லை. ஆனாலும் அனைத்துத் தொகுதிகளுக்கும் அவர்களாகவே வேட்பாளர்களை அறிவித்து விட்டார்கள். விருந்துக்கு அழைக்கவே தயாராக இல்லாத நிலையில்; வந்த விருந்தாளிகளை வெளியே அமர்த்திவிட்டு, உள்ளேபோய் சாப்பிட்டுவிட்டு வந்து, விருந்தினர் களையே திரும்பிப்பார்க்காமல், புறக்கணிக்கின்ற நிலைதான் அங்கே உள்ளது.
கேள்வி :- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஜெயலலிதாவிற்கு உள்ளாட்சி மன்றத் தேர்தல் பற்றி கோபத்தோடு கடிதம் எழுதியிருப்பதாகச் செய்தி வந்திருக்கிறதே?
கலைஞர :- அவர்கள் வேறு என்னதான் செய்வார்கள்? அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிவித்தாலும், அது மாற்றத்திற்குரியது, இறுதியானதல்ல என்று இவர்களாகவே செய்தியாளர்களிடம் சொல்லிச் சமாளித்துப் பார்த்தார்கள். அதற்குப் பிறகும் """"ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்"" என்பதைப்போல; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கள் கடந்த முறை நின்று வெற்றிபெற்ற தொகுதி களிலும், அ.தி.மு.க. நிற்பதாக வேட்பாளர்கள் பெயர்கள் அறிவித்த நிலையில் அவர்கள் வேறு என்னதான் செய்வார்கள்? இருந்தாலும் இப்போது எழுதியுள்ள கடிதத்தில்கூட மேலும் பவ்வியமாக, """"மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி, சுமூகமான தொகுதி உடன்பாடு ஏற்படுத்த வேண்டுமென விரும்பு கிறது"" என்றுதான் தெரிவித்திருக்கிறார்கள். அதற்கும் பதிலளிக்காத நிலைதான் அங்கே உள்ளது.
கேள்வி :- நில அபகரிப்பு வழக்கு என்று கூறி தி.மு. கழகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க ஆளுங்கட்சி வலியுறுத்துவதால், காவல் துறையைச் சேர்ந்த பலர் இதிலே கட்டப் பஞ்சாயத்து நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்களாமே?
கலைஞர் :- இதைப்பற்றி இன்றைய """"தினமலர்"" நாளிதழிலேயே """"நில அபகரிப்பு விசாரணையில் கட்டப் பஞ்சாயத்து - போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எப்போது?"" என்ற தலைப்பில் அரைப்பக்கச் செய்தி ஒன்று வெளி வந்துள்ளது. அதில், """"கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் பணியாற்றும் டி.எஸ்.பி.க்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்களில் சிலர், நில அபகரிப்பு மற்றும் மோசடி தொடர் பான புகார்களின்மீது, கட்டப் பஞ்சாயத்து நடத்துவதாக குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளன. நில அபகரிப்பு புகார் அளித்தோரையும், குற்றம் சாட்டப்பட்ட நபர் களையும் அழைத்து, கட்டப் பஞ்சாயத்து நடத்தி, பிரச்சினைகளை செட்டில் செய்து """"வருமானம்"" பார்த்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் எப்.ஐ.ஆர். பதிவு செய்ததும், சம்பந்தப்பட்ட, எதிரிகளுக்கு தகவல் தெரிவித்து உஷார்படுத்தி தலைமறை வாகச் செய்துவிடுவதாகவும் கூறப் படுகிறது. கோவையில் கூடுதல் எஸ்.பி., மற்றும் இரு டி.எஸ்.பிக்கள், இரு இன்ஸ்பெக்டர்களின் செயல்பாடுமீது சக போலீஸ் அதிகாரிகளே அதிருப்தி தெரிவித்துள்ளனர். திருப்பூரிலும் டி.எஸ்.பி. உள்ளிட்ட மூன்று அதிகாரிகள் மீது, போலீஸ் அதிகாரிகள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.
கேள்வி :- ஆசிரியர்களின் இடமாறு தலுக்கான கவுன்சிலிங்கில் தொடர்ந்து குளறுபடிகள் நடப்பதாக செய்திகள் வருகின்றனவே?
கலைஞர் :- இதைப்பற்றி தலைமை ஆசிரியர்கள் எல்லாம் அதிருப்தியில் இருப்ப தாக செய்திகள் வந்துள்ளன. கவுன்சிலிங் நடப் பதற்கு முன்பே 300 ஆசிரியர்களுக்கு மாறுதல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு விட்டதாகவும், அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு அந்த மாறுதல்கள் செய்யப்பட்டதாகவும் ஆசிரியர்கள் சங்கங்களே கூறுகின்றன. பொதுமாறுதல்; கவுன்சிலிங் மூலமே; ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்க வேண்டும். ஆனால் இந்த ஆண்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆளுங் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் களிடம் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து முறைகேடாக இடமாறுதல் உத்தரவுகளைப் பெற்றிருப்பதாக ஆசிரியர் சங்கங்கள் கூறு கின்றன.
கவுன்சிலிங்குக்கு முன்பே ஆசிரியர் களுக்கு வழங்கப்பட்ட உத்தரவு குறித்து ஆதாரங்கள் நேற்று வெளியாகியுள்ளது. சேலம் சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் கவுன்சிலிங் நடந்தபோது, ஏற்கனவே மாறுதல் செய்யப்பட்ட உத்தரவின் நகல் அங்கே விநியோகிக்கப் பட்டதாம். சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியை ஒருவருக்கு சேலம் மணக்காடு மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு மாறுதல் உத்தரவு வழங்கப் பட்டுள்ளதாம். இந்த ஆணை கடந்த 30ஆம் தேதியே பிறப்பிக்கப்பட்டுவிட்டதாம். அதே தேதியில் ஒரே நாளில் மாநிலம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு இவ்வாறு முறைகேடாக மாறுதல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்.
இந்தக் கவுன்சிலிங் பற்றி தலைமையாசிரி யர்கள் கூறும்போது - முக்கிய காலி இடங்கள் மறைக்கப்பட்டன, குறிப்பாக சென்னையில்
5 இடங்கள் காலியாக உள்ளன, ஆனால் ஒரே ஒரு இடம் மட்டுமே காலியாக இருப்பதாகக் காட்டியுள்ளார்களாம். திருவள்ளூர் மாவட்டத் தில் 12 இடங்கள் காலியாக இருந்தும் 8 இடங்களைத் தான் காட்டியுள்ளார்களாம். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்கள் மறைக்கப்பட்டு விட்டனவாம் என்றெல்லாம் தெரிவித்ததோடு, கடந்த ஆட்சியில் இதுபோல நடக்கவில்லை என்றும், மே மாதங்களில் பதவி உயர்வு கவுன்சிலிங்கை நடத்தி முடித்துவிடுவார் கள் என்றும், ஓய்வு பெறும் இடங்களை மறைக் காமல் 100 சதவிகிதம் சரியாக நடத்தினர் என்றும் அதனால் ஓய்வுபெறும் தலைமையாசிரியர் களும் பயன்பெற்றனர் என்றும் ஆனால் இந்தமுறை அப்படி செய்யவில்லை, முதலில் இருந்தே எல்லாவற்றிலும் குழப்பம், குளறுபடி தான் என்றும் சொல்லியிருப்பதைக் காணும் போது; சமச்சீர் கல்வித் திட்டத்தில் மாணவர் களை ஏமாற்றிய அ.தி.மு.க. அரசு, கவுன் சிலிங்கில் ஆசிரியர்களை ஏமாற்றியிருப்பதை உணர முடிகிறது.
கேள்வி :- முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறதாமே?
கலைஞர் :- ஆமாம், அவர் திருச்சி மேற்குத் தொகுதி இடைத் தேர்தலில் தி.மு.கழக வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்த்துத்தானே, அவர்மீது தொடர்ந்து வழக்குகளை இந்த அரசு பதிவு செய்து கைது நடவடிக்கையிலே ஈடுபட்டுள்ளது. தற்போது ஒரு புது வழக்கு - 1992ஆம் ஆண்டு அதாவது 19 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி விமான நிலையப் பகுதியில் 9.33 ஏக்கர் நிலத்தை ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் வாங்கியது பற்றிய வழக்கு. 2006-2011ஆம் ஆண்டுகளுக் கிடையே நடைபெற்ற சம்பவங்களைப் பற்றித் தான் வழக்கு என்று சொன்னவர்கள், 92ஆம் ஆண்டு வாங்கிய இடம் பற்றி வழக்கு தொடுக் கின்றார்கள். ஞாயிற்றுக் கிழமை அன்று காவல் துறையிலே புகார் கொடுத்து அதனைப் பதிவு செய்து திங்கள் கிழமை அன்று கைது செய்திருக்கிறார்கள்.
இது எத்தகைய வழக்கு? இதன் மீது ஏதாவது விசாரணை நடத்தப்பட்டதா? 1992இல் நிலம் வாங்கியது என்கிறார்கள்? எத்தனை ஆண்டுகள் ஆகின்றன? அது போலவேதான் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அவர்கள் மீதும் தொடர்ந்து அடுத்தடுத்து வழக்குகளைப் பதிவு செய்து கைது நடவடிக்கை களை மேற்கொள்கிறார்கள். ஒரு வழக்கிலே ஜாமீன் பெற்றால், அவர் விடுதலை செய்யப்படு வதற்கு முன்பு அடுத்த வழக்கிலே கைது செய்கிறார்கள். மதுரையில் மத்திய அமைச்சராக இருக்கும் மு.க. அழகிரிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தவறுதலாக சம்மன் அனுப்பி, நீதி மன்றமே மாவட்ட ஆட்சித் தலைவர் அனுப்பிய சம்மன் தவறு என்று சொல்லியிருக் கிறது. வேண்டுமென்றே அழகிரியின் நண்பர்கள் யார் யார் என்று பார்த்து கைது செய்கிறார்கள், வழக்கு போடுகிறார்கள். முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதும் இதே கதைதான். அவர்மீது பொய் வழக்கு ஒன்றினைப் பதிவு செய்து கைது செய்தார்கள். அந்த வழக்கிலே நீதிமன்றத்தில் அவர் ஜாமீன்பெற்று விடுதலை ஆகின்ற நேரத்தில் கடந்த ஜூன் மாதம் 5ஆம் தேதி திருவாரூரில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் என்னுடன் பங்கேற்று அவர் பேசினார். அப்போது முதலமைச்சரைத் தாக்கி பேசியதாக செப்டம்பர் 15ஆம் தேதியன்று அவதூறு வழக்கு என்று பதிவு செய்து சிறை வாசலிலேயே கைது செய்திருக்கிறார்கள். அது வெறும் அவதூறு வழக்குதான். அதிலேகூட அவரது ஜாமீன்மனு தள்ளுபடி செய்யப் பட்டுள்ளது.
அவர் முதலமைச்சரைத் தாக்கிப் பொதுக் கூட்டத்தில் பேசினார் என்று வழக்கு. ஆனால் சட்டப் பேரவையிலேயே முதலமைச்சரும், அமைச்சர்களும் என்னென்ன பேசினார்கள் என்பதற்கு இரண்டொரு சான்றுகளை மட்டும் கூறுகிறேன். அத்தனை பேச்சுக்களும் அவர் களுடைய அதிகாரபூர்வமான ஏட்டிலே இடம் பெற்றவைதான்.
""""கால்நடைத் துறை அமைச்சர் என்.ஆர். சிவபதி :- கடந்த கால மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் 2010-2011ஆம் ஆண்டிற்கு கால்நடை பராமரிப்பு துறைக்கென வெறும் 5 கோடியே
56 லட்சம் ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்தனர். கருணையையும் நிதியையும் பெயரில் மட்டுமே கொண்ட ஒருவர் தனக்கு ஒதுக்கிக் கொண்டதோ அதிகம். துறைக்கு ஒதுக்கி யதோ குறைவு. எங்கள் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் ஒரு கொடை வள்ளல்.""
""""மீன்வளத்துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால் :- கருணாநிதிக்கு மீனவர் பிரச்சினை என்பது கையில் உள்ள மோதிரம் போன்றது, எப்பொழுது வேண்டுமானாலும் கழற்றிவைத்து விடுவார். தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட வேளைகளில் எல்லாம் மத்திய அரசுக்கு ஒரு கடிதம் எழுதிவிட்டு, மாலையில் குத்தாட்ட நட்சத்திர விழாவை 6 மணி நேரம் வரை அமர்ந்து கண்டுகளித்தவர்தான் கருணாநிதி. அவர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதும் ஒன்றுதான், சினிமாவிற்கு வசனம் எழுதியதும் ஒன்றுதான். ஏனெனில் இரண்டை யும் நல்லவர்கள் யாரும் கண்டு கொண்டதே இல்லை.""
""""போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி :- அவசர விபத்து மையங்களுக்கு மூடுவிழா கண்ட கயவர்கள் கூட்டம் கடந்த கால ஆட்சியாளர்கள்.""
""""முதலமைச்சர் ஜெயலலிதா :- தமிழ கத்தில் ஐந்து முறை முதலமைச்சராக இருந்தவர் சட்டத்தைப் பற்றி எதுவுமே தெரிந்து கொள்ளாமல் இத்தனை ஆண்டுக் காலம் வெறும் மனோகரா பாணியில் வசனத்தைப் பேசிக் கொண்டு காலத்தை ஓட்டியிருக்கிறார்....
முதலமைச்சர் கருணாநிதி மக்களைப் பற்றியே சிந்திக்கவில்லை. மக்களைப் பற்றி மறந்துவிட்டார். தன்னைச் சுற்றி துதிபாடி களைச் சேர்த்துக் கொண்டு, பாராட்டு மழையில் நனைந்து, தன்னையே மறந்தார். காலையில் ஒரு சினிமா படம், பிற்பகலில் ஒரு சினிமா படம், மாலையில் ஒரு பாராட்டு விழா -இப்படியே காலத்தைப் போக்கி 5 ஆண்டு ஆட்சிக் காலத்தையும் வீணடித்தார் கருணாநிதி. கூடவே தமிழ்நாட்டையும் சீரழித்தார்....""
""""தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் :- """"மாவட்டந்தோறும் டி.வி.சர்விஸ் சென்டர்கள் அமைப்பதற்குப் பதிலாக, டி.வி.கொள்முதலில் கமிஷன் பெற்ற குற்றத்திற்காக கருணாநிதியை தூக்குக்கு போவதற்குத் தயாரா என்று இந்த மாமன்றத்தில் கேட்டு, நாட்டை சுரண்டி கொழுத்திட்ட சர்வாதி காரிகளை எல்லாம் கடைசியில் தூக்கிலேதான் தொங்க விட்டிருக்கின்றார்கள் மக்கள் என்பதை கருணாநிதிக்கு ஞாபகப்படுத்தி, தான் பெற்றெடுத்த பிள்ளைகளின் அதிகார பாகப் பிரிவினை சண்டையால் தூக்கத்தை தொலைத்துவிட்ட கருணாநிதியின் உயிர் தூக்கத்திலே போகப் போகின்றதா? அல்லது தூக்கில் போகப் போகின்றதா என்பதைப் பார்த்திட இந்த நாட்டு மக்கள் ஆவலாக காத்திருக்கின்றார்கள்.""
தமிழகச் சட்டப் பேரவையிலே எங்களுக்குக் கிடைத்த அவதூறான அர்ச்சனைகள்தான் இவை. இதற்கெல்லாம் மக்கள்தான் தக்க தீர்ப்பளிக்க வேண்டும்; அளிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இன்னமும் இருக்கின்றது.
|