ஜெயலலிதாவின் ஆணவத்திற்கு பதில் தந்தாக வேண்டும்!
கழகத் தோழர்கள் ஒவ்வொருவரும் வேட்பாளராக எண்ணி
நேருவின் வெற்றிக்குப் பாடுபடுவீர் - வெற்றி நிச்சயம்!
திருச்சி மேற்கு தொகுதி கழக செயல்வீரர்கள் கூட்டத்தில் தளபதி மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

திருச்சி, செப். 29 -
திருச்சி மேற்கு தொகுதி இடைத் தேர்தலை யொட்டி நடைபெற்ற தொகுதிக்கழக செயல்வீரர் கள் கூட்டத்தில் கழகப் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார். அதுபோது தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், """"ஜெயலலிதாவின் ஆணவத்திற்கு பதில் தரும் வகையில் தேர்தல் அமைந்திட வேண்டுமென்றும் கழகத்தோழர்கள் ஒவ்வொருவரும் வேட்பாளராக எண்ணி நேருவின் வெற்றிக்குப் பாடுபட வேண்டும்"" என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

வருகின்ற 13ஆம் தேதியன்று திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் நடைபெறும் இடைத் தேர்தலில் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு போட்டியிடுகிறார். அ.தி.மு.க. அரசால் புனையப்பட்ட பொய்யான வழக்குகளால் அவர் கடலூர் சிறையில் அடைக்கப் பட்டிருக்கிறார்.
இந்நிலையில் இடைத் தேர்தலுக்காக திருச்சி யிலுள்ள கலைஞர் அறிவாலயத்தில் மாவட்டச் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்று கழகத் தோழர்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டுவதற்காக கழகப் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் விமானம் மூலம் திருச்சி வந்தார்.
நேற்று முன்தினம் காலை 10.30 மணியளவில் தில்லை நகரில் 5வது குறுக்குத் தெருவில் தலைமைத் தேர்தல் அலுவலகத்தைத் திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார்.
பின்னர் ‘கலைஞர் அறிவாலயம்’ வந்த அவர் செயல் வீரர்கள் கூட்டத்தில் உரையாற்றினார்.

தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:-
""""திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கின்ற"" என்று சொல்வதை விட உங்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நம்முடைய நேரு அவர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத் தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற உணர்வோடு உங்கள் முன் நிற்கின்றேன்.
வெற்றிக்காக நம்மை நாமே உற்சாகப்படுத்திக் கொள்வதற்காக நாம், ஆற்றுகின்ற பணியை ஊக்கத் தோடு உத்வேகத்தோடு நடத்துவதற்காக இந்தச் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

என்னை உங்களிடம் ஒப்படைத்துக் கொள்ள வந்திருக்கிறேன்!

இங்கு உரையாற்றிய அனைவரும் ஒரு கருத்தை உங்களிடம் எடுத்துச் சொன்னார்கள். இந்தச் செயல் வீரர்கள் கூட்டத்திற்கு நான் வந்திருப்பதைச் சுட்டிக் காட்டி, நான் ஏதோ வியூகத்தை அமைக்கப் போகிறேன். என்ன கட்டளையை நீங்கள் வழங்க இருக்கிறீர்களோ, அதை நாங்கள் நிறைவேற்றுவோம் என்ற அடிப்படை யில் உரையாற்றி இருக்கிறார்கள். நான் அவர்களுக்கும் உங்களுக்கும் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். எந்த அறிவுரையையும், ஆலோசனை யையும் எடுத்துச் சொல்ல நான் இங்கு வரவில்லை. உங்கள் வியூகத்தையும் அறிவுரையையும், கட்டளையையும் உங்க ளோடு சேர்ந்து ஏற்றுக் கொண்டு என்னை உங்களிடத்தில் ஒப்படைத்துக் கொள்ள வந்திருக்கிறேனே தவிர வேறில்லை. அதுதான் உண்மை. (கைதட்டல்) ஏனென்றால் திருச்சி மாவட்டம் என்பது தி.மு.க.வினுடைய எத்தனையோ திருப்புமுனைகளுக்கு சாட்சியாக இருந்திருக்கிறது. தி.மு.க.வினுடைய வரலாற்றை எடுத்துப் பார்க்கும் போது வேறு மாவட்டத்திற்கு இல்லாத சிறப்பு திருச்சி மாவட்டத்திற்கு இருப்பது தெரியும். இப்படிப்பட்ட உங்களுக்கு தேர்தல் வியூகத்தைப் பற்றி எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை.

முதன் முதலில் தி.மு.க. தேர்தல் களத்தில் 1957ஆம் ஆண்டு போட்டியிட்டது. தி.மு.க. தொடங்கப்பட்டது 1949ம் ஆண்டு. 1957ம் ஆண்டு தேர்தல் களத்தில் நிற்க வேண்டும் என்று அறிஞர் அண்ணா முடிவு எடுத்தது இதே திருச்சி மாவட்டத்தில்தான். அந்தத் தேர்தலுக்கு முன்னே இங்கு மாநில மாநாடு நடைபெற்ற போது, அந்த மாநாட்டிலே அறிஞர் அண்ணா அவர்கள், தேர்தலில் நிற்கலாமா? வேண்டாமா? என்பதை ஒரு பெட்டியை வைத்து, """"வந்திருக்கும் அனைவரும் கருத்துக்களை எழுதி அதில் போட வேண்டும்"" என உத்தரவிட்டார். இதில் 99 சதவீதம் கழகத் தோழர்கள் தேர்தலில் நிற்க வேண்டும் என்று சொன்னதால் அன்று அண்ணா தேர்தலில் முதன் முதலில் பங்கேற்றார். அதனால் தான் 1957ம் ஆண்டு தலைவர் கலைஞர் அவர்கள் திருச்சி மாவட்டத்தில் குளித்தலையில் நின்றார்கள். சட்டமன்றத்திற்குச் சென்றார்கள். அப்படிப்பட்ட பெருமைக்குரிய மாவட்டம் திருச்சி மாவட்டம்.

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் நம்முடைய கழகம் தோல்வியைச் சந்தித்திருக்கின்றது. இதற்காக வெட்கப் பட வேண்டியதில்லை. எத்தனையோ வெற்றி, தோல்வியை தி.மு.க. சந்தித்திருக்கின்றது. நம்மைப் போன்று வெற்றி பெற்றவரும் இல்லை, தோல்வி அடைந்த வரும் இல்லை. இரண்டையும் ஒன்றாகக் கருதுவது தான் நமது கழகம் என்பதை நிலை நிறுத்த வேண்டும்.

தி.மு.கழகத்தை யாராலும் அழித்துவிட முடியாது!

ஐம்பது ஆண்டு காலம் ஆட்சியிலே இருந்து நிறைவேற்றி இருக்க வேண்டிய அத்தனை திட்டங்களை யும் ஐந்தே ஆண்டிலே நிறைவேற்றித் தந்த ஒரே முதல்வர் தலைவர் கலைஞர் என்பதை நாடு நன்கறியும். இருந் தாலும் நாம் தோற்றோம். வெற்றி பெற்ற ஜெயலலிதா அரசு தேர்தல் உறுதிமொழிகளை நிறைவேற்றுவதைவிட தி.மு.க.வை அழிக்க, நமது கழக நிர்வாகிகள், செயல் வீரர்களை ஒழிக்க அராஜக ஆட்சியை நடத்துகிறார். கழகத்தை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போயிருக்கிறார்களே தவிர, கழகம் அழிந்து விடாது. (பலத்த கைதட்டல்)

நமது கழகத் தோழர்கள் பலரை சிறையில் அடைத்திருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் நடக்கும் இந்தத் தேர்தல், ஆட்சியில் இருக்கும் ஜெயலலிதா தன்னுடைய ஆணவத்தை நிறுத்திக் கொள்வதற்காக நடைபெறுகின்ற தேர்தல். அதற்குப் பதில் தரக்கூடிய வகையில் இந்தத் தேர்தல் அமைந்தாக வேண்டும்.

நேரு மீது தொடர்ந்து வழக்குகள் போடப்படு கின்றன. முதலில் கலைஞர் அவர்கள் நிர்வாகிகளை எல்லாம் அழைத்து இடைத் தேர்தலில் நாம் போட்டியிடலாமா? வேண்டாமா? என்று ஆலோசனை செய்யும் நிலை இருந்தது. முதலில் போட்டியிட வேண்டாம் என தலைவர் நினைத்தார். காரணம், முதலில் அ.தி.மு.க.வில் வெற்றி பெற்ற சிறுபான்மைச் சமூகத்தைச் சார்ந்த இஸ்லாமியர் அமைச்சராகும் நிலையை அடைந்து, ஆனால் சட்டமன்ற உறுப்பினர் பதவியைக் கூட ஏற்க முடியாமல் விபத்தில் சிக்கி இறந்து விட்டார்.
சமீபத்தில் கூட ஒரு பேட்டியின் போது ஒரு நிருபர் தலைவரைப் பார்த்துக் கேட்டார்; """"எங்காவது விபத்திலே அகால மரணமடைந்து விட்டால் அந்த இடத்தை அதே கட்சிக்கே விட்டுக் கொடுத்து விடுவது என்ற ஒரு நிலையை நீங்கள் ஏன் எடுக்கக் கூடாது?"" என்று கேட்டார். அதற்கு தலைவர் சொன்னார்; """"எல்லாக் கட்சிகளும் இதற்கு ஒத்துழைப்புக் கொடுத்தால் தானும் தயாராக இருப்பதாக"" வெளிப்படையாகச் சொன்னார்.

இறந்து போனவர் குடும்பத்தில் இருந்து யாராவது நிறுத்தப்பட்டிருந்தால் தலைவர் கலைஞரும் இந்தப் போட்டியில் இருந்து விலகி இருப்பார். ஆனால் ஆணவத்தோடு அந்தச் சிறுபான்மையினரைப் புறக்கணித்து விட்டு யாரையோ ஒருவரை வேட்பாளராக அ.தி.மு.க. நியமித்துள்ளது. அதற்குள் நான் செல்ல விரும்பவில்லை. அதனால் தான் தலைவர் கலைஞர் அவர்கள் நிர்வாகிகளை எல்லாம் கலந்து பேசி சிறையில் இருக்கக்கூடிய கே.என்.நேருவையே வேட்பாளராக நிறுத்தி இருக்கிறார்.
நானும் நம்முடைய நண்பர்களும் நேரு அவர்களையும், பொன்முடி அவர்களையும் சந்திக்கச் சென்றோம். வேட்பாளராக நேரு அறிவிக்கப்பட்ட காரணத்தால் அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவிக்கச் சென்றேன். ஆனால் சால்வையை எடுத்துச் செல்வதற்கு அங்கிருந்த சிறை அதிகாரிகள் மறுத்து விட்டார்கள். அப்போது வேலு ஒரு காரியம் செய்தார். ஒரு கதர் துண்டை வாங்கிக் கொண்டு அவர் தோலில் போட்டுக் கொண்டு என்னோடு வந்தார். அங்கு உள்ளே சென்றவுடன் அதை என்னிடம் கொடுத்து, நேருவுக்குப் போடச் சொன்னார்.

அந்த வாழ்த்துச் சொல்லும் போது நேரு சொன்னார்; """"நான் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் சிறையில் இருக்கத் தயார். தலைவர் கலைஞர் அவர்கள் என்னை மீண்டும் வேட்பாளராக அறிவித்திருக்கின்றாரே, இதுவே நான் எத்தனையோ முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்ததற்குச் சமம்"" என்று சொன்னார். நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களால், தேர்தல் பணிகளை எ.வ.வேலு முன்னின்று நடத்தக்கூடிய வகையில் பத்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் பக்கத்து மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் எல்லாம் இடம் பெற்றுள்ளனர். இது உங்கள் பாதுகாப்புக்காகத் தான்.

ஆற்ற வேண்டிய பணிகளை நீங்கள் செய்வீர்கள். அப்போது உங்களுக்கு ஏதும் பிரச்சினை வந்து விடக் கூடாது என்று பாதுகாப்பாக இருப்பார்கள். உங்களை ஊக்கப்படுத்த, உற்சாகப்படுத்த அவர்கள் இருக் கிறார்கள். அவர்கள் என்றால் அதில் நானும் அடங்கும்.

ஏற்கனவே அன்பில் பொய்யாமொழி இறந்த போது, அவரது தம்பி அன்பில் பெரியசாமியைத்தான் இடைத் தேர்தலில் தலைவர் கலைஞர் அவர்கள் நிறுத்தினார்கள். அப்போது முன்னின்று பணியாற்றிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஏறத்தாழ பத்து நாட்கள் உங்களோடு இரண்டறக் கலந்து பணியாற்றியதை நீங்கள் மறந்தாலும் நான் மறக்க மாட்டேன். இன்னும் சொல்லப் போனால் அன்று உங்களுடைய பணிகளைப் பார்த்துத் தான் நாங்கள் மற்ற தொகுதிகளுக்கு தேர்தல் பணி ஆற்றக்கூடிய அளவிற்கு ஊக்கமாக அமைந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. அப்படிப்பட்ட உங்களுக்கு ஆலோசனை கூற வேண்டிய அவசிய மில்லை.

ஆங்காங்கே அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் பொய் வழக்குகள் போடக்கூடிய சூழ்நிலை உருவாகும். அதை எதிர்பார்த்துதான் நாம் இருக்கிறோம். அதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. எவ்வளவு மிரட்டல்கள் இருந்தாலும் நாம் வெற்றி பெறுவது உறுதி. காரணம் வெளியில் இருந்து மிரட்டலாமே தவிர வாக்குச் சாவடிக்குள் சென்று எதுவும் செய்ய முடியாது. ஏனென்றால் மத்திய தேர்தல் ஆணையத்தின் கண்காணிப் பில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இன்னும் சொல்லப்போனால் நடைபெறக்கூடிய உள்ளாட்சித் தேர்தலில் முழுமையாக என்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல், திருச்சியில் நடைபெறும் இடைத் தேர்தலில் தான் தலைமைக் கழக அனுமதியோடு தலைவரின் ஒப்புதலோடு என்னை ஈடுபடுத்திக் கொள்ளப் போகிறேன் என குறிப்பிட்டுச் சொல்கிறேன். காரணம் இது முக்கியமான தேர்தல். இடைத் தேர்தலைப் பொறுத்தவரை உறுதியாக வெற்றி பெற்றே தீர வேண்டும். வேட்பாளர் கே.என்.நேரு நீதிமன்ற அனுமதி பெற்று வந்தாலும் வராவிட்டாலும் நாம் தான் வேட்பாளர் என்று ஒவ்வொருவரும் தன்னை வேட்பாளராகக் கருதிக் கொண்டு வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என்று உங்களையெல்லாம் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு தளபதி மு.க.ஸ்டாலின் பேசினார்.

பங்கேற்றவர்கள்

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, என்.செல்வராஜ், அழகு திருநாவுக்கரசு, சின்னசாமி, திருச்சி செல்வேந்திரன், முன்னாள் எம்.பி.க்கள் ஏ.கே.எஸ்.விஜயன், செல்வகணபதி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.என்.சேகரன், பரணி குமார் மற்றும் நன்னியூர் ராஜேந்திரன், ஜோதி கண்ணன், ராணி, பொருளாளர் கே.கே.எம்.தங்கராசா, அம்பிகா பதி, வன்னை அரங்கநாதன், வடிவேல், வாளாடி கந்தசாமி, திருப்பூர் அல்தாப், ஷாஇன்ஷா, சல்மா, சங்கீதா, வசந்தகுமார் மற்றும் கழக நிர்வாகிகள் டோல்கேட் சுப்ரமணி, இராமலிங்கம், காமராஜ், விஜயா ஜெயராஜ், முத்து செல்வம், கிராப்பட்டி செல்வம், தொ.மு.ச. மாயழகு, எத்திராஜ், பொன் ராஜ், வெங்கடாசலம், சிவபெருமாள், பகுதிச் செயலாளர்கள் கண்ணன், செவந்தி லிங்கம், மதிவாணன், பெட்டவாய்த்தலை ரெங்கையன், செங்குறிச்சி கருப்பையா, நாகவேணி வேலு, பாலமுருகன், அறிவுடைநம்பி, மண்டி சேகர், சாந்தபுரம் ஆனந்த், ஆர்.சி.கணேசன், என்.டி.ஆர். ராமதாஸ், தர்மராஜ், இளைஞரணி தங்கமணி, கதிர் வேல், சீமானூர் பிரபு, மணவை நாகராஜ், மைக்கேல் ராஜ், வையம்பட்டி சபியுல்லா, மருங்காபுரி செல்வராஜ், பேரூர் தர்மலிங்கம், வாசு தேவன், குணசீலன், சங்கர், சோழன், ஆனந்த், பழனியாண்டி, துரைராஜ், காயாம்பு, சோம.அரங்க ராசன், இரயில்வே வரதன், மயில் பெரியசாமி, தாத்தையங்கார் பேட்டை, சேகரன், அழகன், மணி நைனா முகமது, ரவி, மாருதி கண்ணன், டி.பி.எஸ். எஸ்.ராஜ் முகமது, ஆர்.ஜி.சத்தியமூர்த்தி, கோ.ரமேஷ், சீதாலஷ்மி முருகானந்தம், பேரிங்பாபு, கோவிந்த ராஜ், செட்டியபட்டி சுப்ரமணி, டீக்கடை ராஜேந்திரன், ராம்குமார், தென்னூர் ரங்கராஜ், பாறையடி சங்கர், துரை பாண்டியன், எம்.ஆர்.சி. சந்திரன், தவசீலன், ஏழுமலை, தனசேகர், நடராஜ், பூக்கடை ராமலிங்கம், முகேஷ்குமார், இ.பி.பாலாஜி, ரங்கன், தென்னூர் ஆறுமுகம், மாணிக்கம், வழக்கறிஞர் தினகரன், ஆறுசந்திரமோகன், தி.மு.ரெங்கா, வேலு, மு.வி. கிட்டு, பவுல் ராஜ், கருத்து கதிரேசன், மோகன் தாஸ், கேபிள் அப்பாஸ், கேபிள் மோகன், புயல் ரவி, லீலா வேலு, கலைச்செல்வி, தமிழரசி, துர்காதேவி, கலாராணி, எழில் அரசி, விசாலாட்சி, கருணா மூர்த்தி, ராதாகிருஷ்ணன், செல்வராஜ், எவரெஸ்ட் ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.